பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 4‬நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 4" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 4


வெளி விருத்தம்.
அல்லும் பகலும் அயரா துழைப்போம் - தமிழ்வாழ
உள்ளத் திடத்தில் ஊக்கம் கொள்வோம் - தமிழ்வாழ
ஒல்லும் வகையான் உள்ளங் கொள்வோம் - தமிழ்வாழ
வெல்லும் நந்தம் வினைகள் என்றும் - தமிழ்வாழ.!


***** ***** *****
கருத்தூன்றுக.!
இப்பாடல் வெண்பாவின் இனமான விருத்தம் ஆகையால் "வெளிவிருத்தம்." எனப்படும். வெள்ளை விருத்தம் என்றும் அழைக்கப்பெறும். பொதுவாக இவ்வகை அதிகமாக வழக்கத்தில் இல்லாமைக்குக் காரணம், அடிகளின் ஈற்றில் ஒரு தனிச்சீர் வருவதே. தொடர்ந்த பொருளுக்கு ஏற்றதாக இல்லாமையால் இதை அவ்வளவாக நம் புலவர்கள் கையாள்வதில்லை. ஆனால் முடியாததென்று எதுவுமில்லை. ஆழ்ந்து சிந்தித்து எழுதினால் தொடர்நிலையாகவும் எழுத முடியும்.
பொதுஇலக்கணம்.:
*நான்கு சீர்களில் நான்கடிகளைப் பெற்றுவரும். (மூன்றடியானும் வரலாம். ஆனால் நாம் நான்கையே பயில்வோம்.)
*அடிகளின் ஈற்றில் தனிச்சீர் பெற்றுவரும்.
*ஒழுங்கமைந்த சீரமைப்புக் கொண்டுவரும்.(சான்று பாடலில் மாச்சீர்கள் மட்டுமே வந்தமை காண்க.)
*ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப் பெற்றால் அது "அடிமறி மண்டில வெளிவிருத்தம் என்றும், பொருள் முற்றுப் பெறாது வந்தால் "நிலைவெளி விருத்தம்." என்றும் பெயர்.

இவ்வகையிலான வெளிவிருத்தம் ஒன்றை விரும்பிய பொருளமைய ஒரு பாடலை (ஒன்று மட்டும்.) எழுதுங்கள். இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பவும்.
★★★★★
*பாவலர் மா.வரதராசன்*

No comments: