பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 3
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 3" இதோ.!
முன்னிரண்டு பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!


பாட்டியற்றுக : 3
வெள்ளொத் தாழிசை

தங்கும் புகழ்சேரத் தாழ்விலாப் பாட்டளித்த
பொங்கு தமிழ்த்தாயின் பொன்னேர் இளையரெனப்
மங்காப்பா வேந்தரைக் காட்டு.!


மங்கி அயற்றீயில் மாளுந் தமிழோரைக்
கங்குல் விலக்கிக் கரைசேர்க்கும் தூயரென
மங்காப்பா வேந்தரைக் காட்டு.!


பொங்கும் கடலலையாய்ப் போற்றுஞ் சுடரோனாய்
எங்கும் தமிழ்விதைத்த ஏந்தலென நம்மாசான்
மங்காப்பா வேந்தரைக் காட்டு.!


***** ***** *****
கருத்தூன்றுக.
இஃது வெண்பாவின் இனமாகிய "வெள்ளொத்தாழிசை." வகையாகும். (வெண்பா, ஆசிரியப் பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், தாழிசை, துறை, விருத்தம் ஆகிய இனங்கள் உண்டு. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது வெண்பாவின் இனமான தாழிசை. இது மூன்று பாடல்கள் பொருளில் ஒத்து வருவதால் "வெள்ளொத்தாழிசை" எனப்படும்.
வெண்தாழிசை என்ற மற்றொரு வகையும் உண்டு. அதை அடுத்த பயிற்சியில் காணலாம்.)

பொது இலக்கணம் :
வெண்டளையைப் பெற்றுவரும். மூன்றடிகளால் வரும். ஈற்றடி முச்சீராய், முன்னிரண்டு அடிகள் நாற்சீராய், ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு,பிறப்பு ஆகியவற்றுள் ஒன்றனைக் கொண்டு முடியும். (சுருக்கமாக.,இது "சிந்தியல் வெண்பாவை மூன்று எழுதுவதாகும்.)
முக்கியமான விதி.,ஒரு பொருள்மேல் மூன்று பாடல்கள் வரவேண்டும்.
உங்கள் விருப்பப்படி நல்ல கருத்தமைந்த வெள்ளொத்தாழிசை ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்புங்கள். இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

★★★★★
*பாவலர் மா.வரதராசன்*

No comments: