பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 1 இன் தொகுப்புஅன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
 பாட்டியற்றுக:1இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
.
 பாட்டியற்றுக,--1
(வெண் செந்துறை.)

1.இரா.கி.இராஜேந்திரன்


பாவலர் பயிற்சி பாங்குடன் பயின்று 

பாவடித் தேநாம் பயனடை வோமே.

2. Niroash G Sri Aravindh.

"இனிய பயிற்சி இன்பம் தருமே 
கனிவாம் தமிழின் கவிதை யிதுவே.!

3.வெங்கடேசன்

தமிழின் பெருமை தரணியில் பரவத்
தமிழில் மட்டும் தகவல் தருவமே!
பிறமொழி வேண்டாப் பேதை யல்லநான்
மறவோம் நம்மொழி மானிடா என்பனே!
ஒற்கம் வரினும் ஒண்டமிழ் மறவேல்
நிற்கும் உம்புகழ் நீணில மீதிலே!
என்னதான் இல்லை எந்தமிழ் மொழியில்
அன்னதைச் சொல்வீர் அயல்மொழி வெறியரே!
(புரிதலுக்காக : 'ஒற்கம்' = 'வறுமை)

4.அழகர் சண்முகம்

நல்ல பயிற்சி நாளும் தொடர்வோம்
அல்லும் பகலும் அரனைத் தொழுவோம்

5. சுந்தர புருஷோத்தமன்

நீண்டு வருதளிர் நிமலநின் கரந்தனை
பூண்ட நறுமணப் பூவணி தொடுமே.
தீண்டு மொருவிர லிடையினிற் றவழ்ந்துனைச்
சீண்ட வருமுனம் சிறுநகை யுகுமே.
மூண்ட நாணத்துள் முகமறைத் திடுவாய்
ஈன்ற மனமிது எழிநகை யுறுமே.
நீண்ட விழியினால் நிகழ்விளை வென்ன
தூண்டு மகந்தனி லொருபர வசமே.

6.ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை

சிந்தையில் நினையா சீர்பெரு கருத்தெலாம் 
வந்தித் திங்கே வரிசையில் நிற்குதே!
எளிமையாய் இலக்கணம் இப்படிச் சொன்னால் 
தெளிவாய் அனைவரும் தேன்கவி தருவரே!
தமிழில் படித்துத் தமிழில் பேசத் 
தமிழனை ஆளத் தரணியில் உளரோ?

 7. விவேக் பாரதி

பாட்டால் தமிழ்மொழி பாரினில் ஓங்கிட 
பாட்டி யற்றினேன் பாரதி காக்கவே !
மண்ணில் கவிதைகள் மன்னிப் பெருகிடப் 
பண்ணும் படைக்கிறேன் பார்வதி காக்கவே !

8. நடராஜன் பாலசுப்பிரமணியன்

கண்ணம் குழியில் காவி தடவி
வண்ணம் குழைத்து வாயில் உரசி
பின்னல் குழலைப் பாங்காய் தவிர்த்து
முன்னர் விழுந்து மேவும் முடியே
பெண்கள் விழிதான் பாயும் கணையாம்
கண்ணல் மொழிதான் காதல் மொழியாம்
மின்னல் இடையால் மோகம் பிறக்க
தன்னால் மனம்தான் தாவிடும் உடனே.

9. கலாம் ஷேக் அப்துல் காதர்

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்
நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்
நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்
நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்.

10. அர.விவேகானந்தன்

அன்பே வடிவாய் அழகே உருவாய்
என்பேர் தந்தாய் என்றும் வாழியே
உலகே போற்றும் உன்னைப் பணிமின்
விலகிடும் துன்பம் விரைந்தே வானில்
மண்ணில் நாளும் மாதவம் செய்தே
கண்ணில் வைத்து காப்போம் என்றுமே

11.இளம்பரிதியன்

தமிழென் உடலே தமிழென் உணர்வே 
தமிழென் குருதி தமிழென் உயிரே!
அமிழ்தென் உணவும் அனைத்தும் அவளே 
இமிழ்திரை ஞாலம் எனக்கென் தமிழே!!
குமிழிடு மெண்ணமும் குறையிலாச் சொல்லால் 
அமிழ்தாய்த் தரவே அருள்வா ளவளே!!
திமிருடன் செந்தமிழ்த் தேர்தனில் செல்வோர் 
தமிழ்க்கென வாழ்பவர் தாமெம் உறவே...

12.சியாமளா ராஜசேகர்

விண்ணில் உலவும் மேகம் கண்டால் 
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுதே !
வண்ண நிலவின் வனப்பில் இதயமும் 
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும் 
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில் 
வெண்செந் துறையாய் மிளிர்ந்து மணக்குதே !

13.சுரேஷ் சீனிவாசன்

இக்கணம் இலக்கணம் இல்லை என்னிடம்
தக்கநல் ஆசான் தேடிக் கொள்வனே.

14.அஷ்பா அஷ்ரப் அலி

வாழுங் காலம் வாய்மை யுடனே
வாழும் முன்னை வாழ்த்தும் உலகே
நாளுங் காணும் நளிந் தார்க்கீயக்
கூழுக் அலைவோர் குறையும் மிங்கே

15.நாகினி கருப்பசாமி

கொஞ்சமும் தீராக் கோபம் உறவினில்
வஞ்சமும் நித்தமும் வற்றா ஆறே!
அன்பும் குறைவிலா அறமும் இனித்திடும்
பண்பில் ஒழுகப் பயின்றிடு மனமே!
இஞ்சியும் சுக்கும் இடித்தே தேனுடன் 
கஞ்சியும் தந்தால் கரைந்திடும் நோயே!
பஞ்சும் நெருப்பும் பகையென நீங்கிடின்
நெஞ்சது குத்தும் நெருஞ்சி முள்ளே! .

16. முனைவர். பத்மநாபன்

இலக்கணம் இன்றிக் கவிதை இயற்றல்
மலர்கள் இன்றியே மாலை தொடுத்தல் !2 comments:

Jagadeesan Muthukrishnan said...

மரபுப் பாக்கள் மகிழ்வினை ஈந்து
உரக்கப் பாட உயர்வினைத் தருமே !

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் said...

அருமை வாழ்த்துகள்.