பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 3 இன் தொகுப்புஅன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முதலிரு பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 3இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக: 3

*வெள்ளொத்தாழிசை*

1 . வள்ளி முத்து
[ கடல்வளம்]
அலையடிக்கும் மீன்துடிக்கும் அங்குமிங்கும் ஓடும்
நிலையில்லா நீரலைகள் கரையுடைந்து பாடும்
வலைவிரிக்க வற்றாது மீன்


கலமோடும் மேலாடும் கீழாடும் நீரில்
பலமோடு காற்றுவந்து பாய்விரிக்கும் தேரில்
வலைவிரிக்க வற்றாது மீன்


தலைவெளுத்து நீருருண்டு பாசலைகள் மோதும்
கலையெழுதி நண்டுகளோ நேர்கரையில் ஓதும்
வலைவிரிக்க வற்றாது மீன்.


2. கவிமாமணி சேலம்பாலன்
  எனன உலகமிதோ? எல்லோரும் எப்போதும்
  கன்னலெனத் தன்னலத்தைக் காணவே எண்ணுகிற 

  தன்மையென்று மாறுமோ தான்?

¡ தன்மையிலே ஏற்ற இறக்கங்கள் உண்டெனினும் 

  நன்னயமாய் வாழ்பவரே நாணிலத்தில் உள்ளரெனும் 
  தன்மையென்று மாறுமோ தான்?

¡ என்னவிலை தந்துமே எண்ணுவதை வாங்குகிற 

  தன்மையுளர் மற்றவர்க்கும் தந்துமகிழ் நன்னிலைத் 
  தன்மையென்று   மாறுமோ தான்?    

3. நடராசன் பாலசுப்பிரமணியன்
தரமான கல்வி தடையற்ற வாழ்வு
பரிவுடன் வைத்தியம் பெற்றிட நாமே
வரியை செலுத்த வளம்!


விரைவுறும் சாலை வளமான ஆட்சி
சரிவிலா மின்சாரம் சீராய்க் கிடைக்க
வரியை செலுத்த வளம்!


உரிமை கிடைத்திட உள்ளம் மகிழ
விரிவான வாழ்வு வசமாம் நிறைவாய்
வரியை செலுத்த வளம்!


4. சுந்தர் புருஷோத்தமன்
இமிழ்க்கு மிசைஞர்க் கினிதாம் பொருட்டேன்
கவிழ்த்த விதழார் கவிப்பூ முளைக்குந்
தமிழ்த்தேங் குளத்திற் றவழ


சிமிழ்வாய் விரித்துச் சிரித்தா ளொருத்தி
அமிழ்தென் றதனுள் ளமிழ்ந்தாய் - அமிழ்த்தாத்
தமிழ்த்தேங் குளத்திற் றவழ்.


அவிழ்பூ வரும்பி னருந்தே னருந்திக்
கவிழ்ந்தா யறியாக் குழந்தாய்! - கவித்தீந்
தமிழ்த்தேங் குளத்திற் றவழ்.


5. வெங்கடேசன் சீனிவாசகோபாலன்
உமியை உகவார் அரிசி யிருக்க
இமியும் பழுதிலாச் சொற்களைக் கொண்ட
தமிழின் பெருமையே பேசு


திமிலுடை ஏறன் குமரன் வளர்த்த
தமிழ்மொழிக் கீடித் தரணியில் உண்டோ
தமிழின் பெருமையே பேசு


தமிழ்தமி ழென்றே பலமுறை சொல்லின்
அமிழ்தென ஆகுமே யச்சிறப்பு கொண்ட
தமிழின் பெருமையே பேசு.


6. முனைவர் பத்மநாபன்.
அன்பே எனவழைத்தான் ஆருயிரே என்றானே
இன்பத்தில் மூழ்கினேன் ஏங்காதே என்றானே
என்று வருவான் இவன்


இவனையே நம்பியே என்னலத்தை ஈந்தேன்
உவந்தான் முதலில் முடிவில் உவர்ப்பென்றான்
என்னே இவனது இயல்பு!


இயல்பாய் இருப்பான் எனநான் இருந்தேன்
அயலவன் போலவே ஆனான் அவனின்
இயல்பே இதுதானோ என்?


7. சியாமளா ராஜசேகர்
சஞ்சலம் தீர்க்கும் சமய புரத்தாளை
நெஞ்சுருக வேண்டிடில் நிம்மதி கிட்டிடும்
தஞ்சமடைந் தால்காப்பாள் தாய் .


மஞ்சள் முகத்தாள் மலர்ப்பதம் பற்றிடில்
வஞ்ச மகலும் வருந்துயர் தோற்றோடும்
பஞ்சம் விலகும் பயந்து .


கஞ்ச மலரால் கனிவுடன் அர்ச்சிக்க
அஞ்சே லெனவே அபய மளித்திடும்
மஞ்சுள மேனியளை வாழ்த்த


8. ஞா.நிறோஷ் அரவிந்த்
(காதலைப் பாடிக் களி...)
மோதலை நீக்கிடும் மோகம் தவிர்த்திடும்
சாதலைச் சாடுமெனச் சாற்றிப் புகழுடைக்
காதலைப் பாடிக் களி


கீதமே போலும் கிறக்க மளிக்குமே
வேதமும் ஆகியே வேதனை தீர்க்குமக்
காதலைப் பாடிக் களி


பேதமே யில்லாப் பெருமையைத் தந்திடும்
வாதையே போக்கிநல் வாழ்வு மளிக்குமக்
காதலைப் பாடிக் களி


9. நாகினி கருப்பசாமி
குலத்தை அழித்துக் குடும்பத்தைப் பேணும்
நலத்தைச் சிதைத்து நல்மதிப்பு மாய்க்கும்
குடியை ஒழித்திடக் கூவு!


மதுவைக் குடித்து மதிமயங்கிச் சந்தை
பதுக்கல் தொழிலெனப் பாவப்பயன் ஈனும்
மதுதான் வேண்டாம் மற!


குடித்தே அடகாய்க் குடலும் கெட்டுப்
படித்தும் முடங்கிநலன் பாழாதல் நோயாம்
மதுவைத் தொடுதல் முடக்கு!


10. விவேக் பாரதி
தலைப்பு : சக்தி பதமே சரண்
முக்தி பெறவே முனைந்தால் சிவன்பாகச்
சக்தி பெயரைச் செபித்திடுவாய் - பக்தனே !
சக்தி பதமே சரண் !


மண்ணில் உயர்த்து மகிழ்வெய்த சக்தியினைக்
கண்டு தொழுது களிப்புறுவாய் - எண்ணம்வை
சக்தி பதமே சரண் !


தாயே தமிழருள்வாள் ! தாங்கிப் பிழையென்னும்
காயைத் தவிர்த்து கவியருள்வாள் - நீயேசொல்
சக்தி பதமே சரண் !


11. கலாம் ஷேக் அப்துல் காதர்.
தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றித் தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண வியப்பு.


வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான்
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலே தூற்றும் வியப்பு.


இல்லாமை மூலம்நாம்: இல்லை அவனன்றி
இல்லை அவனில்லை என்றும் விளிப்பதேன்?
வில்லைப்போல் நின்றேன் வியந்து.


12. இரா.கி.இராஜேந்திரன்
பெண்ணவள் என்பவள் பெண்மையின் தாயவள்
கண்ணவள் இல்லத்தைக் காப்பவள் என்பதை
எண்ணத்தில் ஏற்ப தறிவு


வெண்ணெயில் நெய்போல வாழ்வினில் சேர்ந்தவள்
பெண்ணவள் ஆள்பவள் அச்சாணி போன்றவளை
எண்ணத்தில் ஏற்ப தறிவு


உண்பதற்குப் பண்டம் சமைக்க உலைவைத்துப்
பண்போடு தான்சமைத்து உண்ணப் பரிமாறல்
எண்ணத்தில் ஏற்ப தறிவு.


13. சாரா பாஸ். (Sara bass.)
உழைப்பே தருமாம் உயர்வு
பிழைப்பை மறவாது பின்பற்றும் பண்பால்
மழையும் தவறாது மண்ணிற் பொழியும்
உழைப்பே தருமாம் உயர்வு .


தழைத்து வளர தரிசு நிலமும்
அழைப்போம் மழைத்துளி அன்புடன் பொழிய
உழைப்பே தருமாம் உயர்வு .


உழைப்போர் உலகின் உயிர்நாடி என்றால்
பிழைப்பே மலரும் பிசகாது மண்ணில்
உழைப்பே தருமாம் உயர்வு .


14. அர. விவேகானந்தன்
தன்நலமும் பெண்நலமும் தாழ்வின்றிப் பேணியே
நன்மையாய்ச் சேர்ப்பான் வளத்தினை மண்மீதில்
மன்னவனே மங்கைக் குயிர்.


துணைவனே துன்பம் துடைப்பான் இனித்திடும்
கன்னலாய்க் காதல் தருவான் புவியதனில்
மன்னவனே மங்கைக் குயிர்.


இன்பமில்லை எந்நாளும் இல்லில் மருண்டுமே
மன்னனவன் மாய்ந்திடில் மாண்பில்லை ஆய்ந்திடில்
மன்னவனே மங்கைக் குயிர்.


15. அழகர் சண்முகம்
தலைப்பு .(ஆறு)
கலையாளுங் கல்வியைக் கண்ணாகக் கற்கும்
தலையாய மேன்மையைத் தப்பினோரை யெண்ணி
அலையாய்ச் சிரித்ததோ ஆறு?


நிலையான கொள்கைபோய் நித்தமிடும் வேடம்
கலையா தெனவெண்ணும் கள்வரின் கூத்தால்
அலையாய்ச் சிரித்ததோ ஆறு?


விலையாக வீணரின் வித்தையினை நம்பித்
தலையாட்டுங் கூட்டம் தடம்மாறக் கண்டே
அலையாய்ச் சிரித்ததோ ஆறு?


16. பாவலர் கோ.மலர்வண்ணன்
தமிழ்வழிக் கல்வி
அமிழ்தாய் இனிக்கும்; அறிவை வளர்க்கும்;
இமியும் கெடுதலை ஏற்படுத் தாது;
தமிழ்வழிக் கல்வியே தான்!


திமிரை அடக்கும்; திறமையைக் கூட்டும்;
நிமிர இடந்தரும்; நேர்மையை நாட்டும்;
தமிழ்வழிக் கல்வியே தான்!


சுமையாய் இராது; சுளுவாய் இருக்கும்;
அமைவாய்ப் பயின்றால் அதற்கிணை யில்லை;
தமிழ்வழிக் கல்வியே தான்!


17. வனராசன் பெரிய கண்டர்
என்தாய் வயிற்றின் கருவில்லை யானாலும்
ஒன்றாய் உடன்பிறப்பாய் ஒன்றாகிக் காப்பதனால்
நன்றாகப் போற்றுவேன் நட்பு.


நாள்வரும் வேதனைகள் நானூறு வானாலும்
தோள்சேர்த்துத் துன்பத்தைத் தூளாக்கிக் காப்பதனால்
நாள்தோறும் போற்றுவேன் நட்பு.


ஏராள மென்சொந்தம் எங்கேயு மென்சுற்றம்
ஊராகி வந்தாலும் சோராது காப்பதனால்
சீராகப் போற்றுவேன் நட்பு.


18. தமிழகழ்வன் சுப்பிரமணி
ஒத்தா ழிசைகடல் உள்ளம்; நிலையின்றிக்
கத்து தலைக்கொண்டு காவல்கை யற்றன;வ
கத்துத் தளைகொண்டு கா


ஒத்தா ழிசைகடல் உள்ளம்; பொதியுள்சங்
கத்தமிழ் பேரொலி கட்பொருள் கொள்க;வ
கத்தமிழ் பேரொளி காண்


ஒத்தா ழிசைகடல் உள்ளம்; உளதன்ன
கத்தெண் ணிலாத வளங்கள்; வளங்களுள
கத்தென் னிலாத வளம்?


19. சிதம்பரம் சு. மோகன்
('ழ'கரத்தைச் சரியாகச் சொல்)
பழத்தைப் பலமென் றுரைப்பார்தம் நாவில்
பழுக்கவோர்க் கம்பியைக் காய்த்தே - அழுத்தி 

இழுப்பாரை வாழ்த்தலாம் வா.

மழையை மலையென்று நாணாமற் பேசிப் 

பிழைப்போர்க்கும் கம்பியைக் காய்த்தே - இழுக்க 
விழைவாரை வாழ்த்தலாம் வா.

தமிழைத் தமிலென்று கூசாமற் பேசித்
தமிழேயென் தாய்மொழியா மென்பார் - திமிரை 

நிமிர்ப்பாரை வாழ்த்தலாம் வா.
★★★★★

No comments: