பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

காதல் இலக்கணம்பூங்காவில் என்னவளும் காத்தி ருந்தாள்
           புத்துணர்வாய் அவளெதிரில் நான மர்ந்தேன்
தாங்காத காதல்தீ தகித்த தாலே
          தழுவுதற்கு முற்பட்டேன் தடுத்தாள் அத்தான்,
பாங்கான இலக்கணத்தின் பாவ லர்நீர்
          பலஅய்யம் எனக்குண்டு தீர்ப்பீர். என்றாள்
மாங்காயை வேண்டிவந்தேன் தேனை யூற்ற
          மகிழ்ச்சியிலே திளைத்தவனாய் கேள்கேள் என்றேன்.!உயிரெழுத்து மெய்யெழுத்து சார்பெ ழுத்தென்.(று.)
         உரைக்கின்றார் அவையெனக்குச் சொல்வீர். என்றாள்
உயிரெழுத்து நீ,உன்றன் மெய்நான் நாமும்
        ஒன்றாகிச் சார்ந்திருத்தல் சார்பெ ழுத்தாம்
உயிருடலாம் நாமிருவர் இணைந்த பின்பே
        உண்டாகும் உயிர்மெய்யே என்றேன்...உன்றன்
உயிர்ப்புள்ள இதயத்தின் சொற்க ளெல்லாம்
        உருவாகும் பகையழிக்கும் ஆய்தம் என்றேன்.!

மெய்மயக்கம்.? உயிர்மயக்கம்.? புணர்ச்சி.? என்றாள்.
        மெல்லியலே என்மீதில் உன்றன் காதல்
மெய்மயக்கம்.! உன்மீதில் என்றன் அன்பே
        மேலான உயிர்மயக்கம்...உள்ளம் ஒன்றிப்
பொய்யில்லா அன்போடு தடைய கற்றிப்
        புணர்வதுவே புணர்ச்சியென்றேன் நந்தம் காதல்
செய்வினையாம்., அதைத்தடுக்கும் உன்றன் தந்தை
        செய்வதுதான் செயப்பாட்டு வினையாம் என்றேன்.!

எழுத்தசைசீர் தளையடியும் தொடைகள் பற்றி
         எடுத்துரைப்பீர் என்றிட்டாள் காதல் உன்மேல்
எழுவதுவே எழுத்தாகும் அவ்வெ ழுத்தால்
         என்னுள்ளம் அசைவதுவே அசையாம்..உன்றன்
செழுங்கழுத்தும் பல்வரிசை இடையும் சீராம்
        சேர்த்தென்னைப் பிணைக்கின்றாய் தளையாய்...உன்றன்
முழுவனப்பே அளவான அடியே.! என்மேல்
         முறையின்றிக் கணைதொடுத்தல் தொடையே.! என்றேன்.!

மெல்லினமே வல்லினம்நான் உன்றன் சின்ன
         மின்னலெனும் இடையினத்தால் ஈர்க்கப் பட்டேன்
சொல்லாலே நாரெடுத்துத் தமிழ்ப்பூக் கொண்டு
        தொடுத்திட்டேன் தமிழ்மாலை மகிழ்ச்சி தானே.?
நல்லாளே.! நற்றமிழுக் கிணையே.! வாழ்வில்
         நாமிணையும் பொன்னாளை விரும்பு கின்றேன்
பல்லாண்டு வாழ்கின்ற தமிழைப் போலே
         பல்லோரும் நமைப்போற்ற வாழ்வோம் கண்ணே.!

                          ★★★

பாவலர். மா.வரதராசன்*

No comments: