பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sept 2015

பாட்டியற்றுக 2



பைந்தமிழ்ச் சோலையின் மரபு மலர்களுக்கு அன்பு வணக்கம். பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான பாட்டியற்றுக பகுதியின் இரண்டாவது பயிற்சியிது. முன்போல் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். பெரும்புலவர்களும் கலந்து கொண்டால் இளந்தலைமுறையினர்க்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!

**********-****-********
வெண்பா (ஒன்றில் நான்கு.)

------------ --------------------------------------
பீடுடைச் செந்தமிழே பேச்சாகி மூச்சாகி
நீடுபுகழ் பெற்றிலங்க நித்தமிவர் - ஈடின்றித்
தொண்டு பலசெய்து தூய பணியாற்றிப்
பண்டைப் புகழ்சேர்த்தார் பார்.!

(தலைப்பு.: பாவேந்தர்.)
*பாவலர் மா.வரதராசன்*
*** *** *** *** *** *** ***

கருத்தூன்றுக.:
வெண்பாவின் பொது இலக்கணம்.
வெண்டளையான் அமைந்து, (காய்முன்நேர், விளம்முன்நேர், மாமுன்நிரை.)
ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், ஒருவிகற்பமாகவோ, இருவிகற்பமாகவோ, (பல விகற்பம் கலிவெண்பா, பஃறொடை வெண்பா.) ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும், ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்ப்பாட்டுள் ஒன்றைக் கொண்டு, செப்பலோசை பெற்று வருவது வெண்பாவாகும்.

பயிற்சிப் பாடலுக்குரிய சிறப்பு விதிகள்
கொடுக்கப்பட்டுள்ள பாடல் ஒன்றில் நான்கு என்பது ஒரு வெண்பாவை இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, குறள் வெண்பா என நான்காக எழுத முடிந்தால் அது ஒன்றில் நான்காம். ஒவ்வொன்றும் பிரித்தாலும் பொருள் தரவேண்டும்.
கொடுக்கப்பட்ட பாடல்
1 நேரிசை வெண்பா,
2. தனிச்சொல் கோடின்றி "இன்னிசை வெண்பா,
3, முதலடியை நீக்க. "இன்னிசைச் சிந்தியல் வெண்பா, (இரு விகற்பம்.)
4. முதல் ஈரடியை நீக்க "குறள் வெண்பா.

என நான்காக எழுத முடியும்.
இவ்வாறான வெண்பா ஒன்றை (ஒன்று மட்டும்.) வரும் வெள்ளிக்கிழமைக்குள் எழுதி அனுப்புக. கருத்துப் பகுதியில்(கமாண்ட்.) மட்டுமே உங்கள் பாடலை எழுதவும்.


பாவலர் மா.வரதராசன்

4 comments:

Jagadeesan said...

இட்டலிகள் சாப்பிட்டார் இன்முகம் காட்டியே
கட்டளைகள் இட்டார் கனிவுடனே என்றெல்லாம்
பொய்யுரைத்த செய்திகளைப் போட்டுடைத்த மந்திரியை
தெய்வங்காள் கண்திறந்து பார் !

Jagadeesan said...

சிந்தியல் வெண்பா
------------------------------
நொய்யலாறு வந்த நொதியெல்லாம் சோப்புநீர்
பெய்யலால் வந்ததென்று பேசுகிறார் - பொய்யிடையாய் !
நெய்வடியும் கேழ்வரகில் நம்பு .

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

அருமை வாழ்த்துகள்.

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

அருமை வாழ்த்துகள்.