பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Feb 2016

சோலைக் கவியரங்கம், கவிஞரை அழைத்தல் : 4



கவிஞரை அழைத்தல் : 4
(அறுசீர் விருத்தம்)

தமிழ்மணம் கமழச் செய்து
     தளர்விலா ஊக்கத் தோடே
சிமிழென விளங்கும் பாக்கள்
     திறத்துடன் தேர்ந்து கற்றுக்
கமழ்கவி நாளும் யாத்துக்
     களிப்பினை நல்கித் நம்மை
அமிழ்த்திட. வருகின் றாரே?!
     அருந்தமிழ்ச் சுவையைக் கொண்டே!

சரஸ்வதி அவர்களே வருக!
சந்தத் தமிழ்க்கவி தருக!!



போற்றப்பட வேண்டியது...
இ. தாய்மை
**************
கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி, தமிழ்நாடு
ஆசிரியர், மரபு கவிஞர், உரைவீச்சிலும் வல்லவர்.
கவியருவி உள்பட மேலும் பல விருதுகளைப் பெற்றவர்.
"பைந்தமிழ்ச் சோலையின் " பாட்டியற்றுக பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்பவர்.
★★★

இ. தாய்மை
""""""""""""
தமிழ் வாழ்த்து
(தரவு கொச்சகக் கலிப்பா)

தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
நோய்தன்னை நீக்கிடவும் நோகாமல் தாய்மொழியை
வாய்திறந்துப் பேசிடவும் வகையாக வனைந்திடவும்
தாய்போல நமைக்காக்கும் தமிழ்மொழியே நீவாழ்க !!

அவையடக்கம்
(தரவு கொச்சகக் கலிப்பா)

சோலைதனில் கவியரங்கம் சோர்வுநீங்க நடத்துகின்றார் .
காலைதனில் எழுந்தவுடன் கருத்தாகக் கற்பிப்பார் .
வேலையது பலவரினும் வேண்டியதைப் பயிற்றுவிப்பார் .
பாலைதனில் நின்றிடினும் பாவலரை மறவோமே!

போற்றிடுவோம் தாய்மையினைப் போற்றுகின்றேன் நாளும்நான்
மாற்றமில்லை இதிலென்றும் மகத்துவமாம் தாயுள்ளம் .
சீற்றமில்லை மனத்தினிலும் சீர்த்தமிகு நன்னெறியை
ஏற்றமுடன் சொல்லிடுவேன் ஏற்றிடுவோம் எந்நாளும் .

அன்புடைய நெஞ்சத்தா லாளுகின்ற சக்தியினை
அன்னையென்று செப்பிடுவோ மாசிகளைத் தந்திடுவாள்
என்றனையும் காத்தருளு மெந்தெய்வ மவளன்றோ?
மன்றிலுனை வாழவேண்டி மனதார வேண்டுகின்றேன் .

உருக்குலைந்துப் போய்விட்ட உறவுகளின் நிலைகண்டு
கருசுமந்தத் தாயவளோ கண்ணீரில் நின்றிடுவாள் .
நெருப்பெனவும் கொதிக்கின்ற நெஞ்சமதில் சொல்லுமொழி
திருத்துகின்ற தீவினைகள் தீர்க்கின்ற உலகநெறி .

வருத்தத்தின் வேதனையால் வந்திடுமாம் வார்த்தைகளும்
கருத்தாழம் மிக்குடைய கள்ளமில்லா வாழ்வுநெறி .
விருப்பத்தில் கற்றிடுவோம் விளைந்திடுமாம் நல்வாழ்வு .
தருக்கங்கள் செய்யாது தாய்மையினைப் போற்றிடுவோம் .

கண்ணிலுள்ள காட்சியெல்லாம் காவியமும் படைத்திடுதே .
மண்ணிலுள்ள 'மாதா'தான் மகத்தான பெருந்தெய்வம் .
விண்ணிலுள்ள விண்மீனும் விந்தைதனை உரைத்திடுமே .
பண்ணிலுள்ள இன்னிசையால் பலர்போற்ற எடுத்துரைப்போம் .

நேயமிக்கத் தாய்மையினை நேசத்தால் போற்றிடுவோம் .
காயமதை மாற்றுகின்ற காரிகையைப் போற்றிடுவோம் .
தீயனவும் கனல்கக்கித் தீவினைகள் நீக்கியென்றும்
மாயமதைச் செய்கின்ற மாதாவை வணங்கிடுவோம்!

உதிரத்தை உணவாக மாற்றியவள் நம்மன்னை .
அதியன்பு கொண்டுநமை அன்புடனும் வளர்த்திடுவாள் .
கதியாகப் பற்றிடுவோம் கண்போலக் காத்திடுவோம் .
மதிபோன்ற முகத்துடனே மங்கையவள் மலர்ந்திடுவாள் .

கூடிநின்று போற்றிடுவோம் ; குவலயமாம் தாய்மையினை
வாடிநிற்க விடவேண்டாம் வரமாக நினைத்திடுவோம் .
பாடிநின்று வாழ்த்திடுவோம் பரவசமாய்த் தாய்தன்னை .
ஓடிவந்தே அணைத்திடுவா ளோங்கிடவும் செய்திடுவாள் .

இயற்கையினைப் போற்றுதலு மியல்பானத் தாயுள்ளம்
செயற்கையினை நீக்கிவிட்டுச் செல்வத்தைத் தந்திடுவாள் .
முயற்சியினைக் கைக்கொள்ள முழுதான முதற்கடவு
ளயற்சியின்றி நான்சொல்வே னன்புடைய தாய்மையினை!

காலங்கள் மாறிடினும் கருத்தென்றும் மாறாது
கோலங்கள் கொண்டுநமைக் கோபுரமாய்ச் செய்கின்ற
சீலங்க லெங்கிலுமே சிறந்திடுமாம் தாயன்பு .
பாலங்கள் கட்டிடுவோம் பணிந்துநாமும் போற்றிடுவோம்!


திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா
நாள். :17/01/2016
★★★★★*

2 comments:

Unknown said...

மிகவும் அருமையான தொகுப்பு மிக்க நன்றி கவிஞர் சீராளன் அவர்கட்கும் பாவலர் ஐயா அவர்கட்கும்

Unknown said...

மிகவும் அருமையான தொகுப்பு மிக்க நன்றி கவிஞர் சீராளன் அவர்கட்கும் பாவலர் ஐயா அவர்கட்கும்